ஒஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், புதிய அத்தியாயமாக தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
பிரபல எழுத்தாளர் ரூபா சக்ரவர்த்தியுடன் இணைந்து அவர் குறித்த சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார்.
தன் உலகத்தை வடிவமைத்த இசை, கருத்துகள், சவால்கள் மற்றும் படைப்புப் பயணம் ஆகியவற்றை இப்புத்தகம் ஆழமாகப் பேசுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ள கருத்துக்கள்.
எனது இசை என்பது எனது மனதின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியிலிருந்து பிறக்கிறது.
நான் எதிர்கொள்ளும் சவால்கள், லட்சியங்கள், மனப்போராட்டங்கள் மற்றும் உளவியல் ரீதியான தாக்கங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.
அவை யாவும் எனது இசையின் ஒரு பகுதியாக மாறுகின்றன.
இந்தப் பயணத்தை வடிவமைத்த அனைத்து விடயங்களையும் இப்புத்தகத்தின் மூலம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மானின் வாழ்க்கை வரலாறு வெளியாகி இருந்த நிலையில், தற்போது வெளியாகவுள்ள இந்த புதிய சுயசரிதை புத்தகம் அவரது கலைப் பயணம் மற்றும் வாழ்க்கையின் பல சுவாரஸ்யமான பரிமாணங்களை வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








