வியட்நாமில் நடைபெற்ற Miss World 2026 உலக ஆடை வடிவமைப்பு விருதுப் போட்டியில், உகண்டா அழகி அணிந்து சென்ற ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அடுக்குகள் நிறைந்த வாழ்க்கை (Layers of Life) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆடையை, உகண்டாவைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் கீஷா அப்துல்லா (Keesha Abdallah) உருவாக்கியுள்ளார்.
தானும் ஒரு புதிய தாய் என்பதால் உத்வேகம் பெற்றதாகக் கூறிய வடிவமைப்பாளர், சி-செக்ஷன் (Caesarean section) எனப்படும் அறுவை சிகிச்சையின் போது மனித உடலில் கடந்து செல்லப்படும் ஏழு உடற்கூறியல் அடுக்குகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆடையை வடிவமைத்துள்ளார்.
இந்த ஆடையில் பயன்படுத்தப்பட்டுள்ள நிறங்கள் வெளிறிய தோல் நிறம், இளஞ்சிவப்பு மற்றும் தங்கம் போன்ற டோன்களில் தொடங்கி, பவளம், அடர் சிவப்பு மற்றும் பர்கண்டி நிறங்களாக மெல்ல மாறுகின்றன.
இந்த வண்ண மாற்றங்களும், ஆடையில் பதிக்கப்பட்ட மணிகள் மற்றும் படிகங்களும் அறுவை சிகிச்சையின் பல்வேறு நிலைகளை ஒரு கலை வடிவமாக கண்முன்னே கொண்டுவருகின்றன.
தாய்மையின் வலிமையையும், புதிய உயிரை இந்த உலகிற்கு கொண்டு வர தாய்மார்கள் எதிர்கொள்ளும் உடலியல் மற்றும் உணர்வுபூர்வமான சவால்களையும் போற்றும் ஒரு அர்த்தமுள்ள படைப்பாக இந்தப் பேஷன் சாதனை உலகளவில் பாராட்டப்பட்டு வருகிறது.









