இந்து சமுத்திரத்தின் இந்தோனேசியாவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் இன்று (17) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.6 மெக்னிடியூட்டாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை 2.41 மணியளவில் இந்தோனேசியாவின் மாலுக்கு மாகாணத்திற்கு அருகிலுள்ள பண்டா கடற்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 20 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவை!
இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் இலங்கைக்கு தற்போது சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி, இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வழமைபோன்று தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தேசிய மற்றும் சர்வதேச தொடர்புடைய நிறுவனங்களுடன் கலந்தாலோசித்த பின்னரே வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலுக்குச் செல்ல வேண்டாம் – மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
இதற்கிடையில், இலங்கையின் கடற்பரப்பில் மற்றுமொரு முக்கியமான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ‘அக்வான்’ (Akvan) புயலாக வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் மேலும் வலுவடைந்து தீவிர புயலாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நவம்பர் 20ஆம் திகதி இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









