வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படாமைக்கு எதிராகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஷிரான் குணரத்ன, கலாநிதி சோபித ராஜகருணா மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (16) குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி நயனதாரா பாலபட்டபெந்தி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் புதிய சம்பள நிர்ணய சபையொன்றை நியமிக்க வேண்டியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சம்பள நிர்ணய சபையின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய சபையொன்று நியமிக்கப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதிய சம்பளம் வழங்கப்படாமையினால் தமது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகக் குற்றஞ்சாட்டியே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் குழுவினர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
தமது சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வாக உரிய நிவாரணம் வழங்குமாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர்கள் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.
சட்ட மாஅதிபர் உள்ளிட்ட பலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த மனு எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.









