பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இலங்கையின் சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தற்போது சந்தையில் ஒரு முட்டை ரூ.42 முதல் ரூ.45 வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் செயலாளர் அநுரசிறி மாரிசிங்க தெரிவித்துள்ளார்.
முட்டை உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதுடன், சந்தையில் முட்டைக்கான கேள்வியும் அதிகரித்துள்ளமையே விலை உயர்வுக்கான முக்கிய காரணங்களாகும்.
அதிக மழை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னர் 80 சதவீதமாக இருந்த உற்பத்தி, தற்போது 50 முதல் 60 சதவீதம் வரை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கோழி உணவு உற்பத்திக்குத் தேவையான மக்காச்சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதால் உற்பத்திச் செலவு உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் முட்டைக்கான கேள்வி மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தற்போதைய விலை உயர்வு செயற்கையானதல்ல என்றும், சந்தையின் கேள்வி மற்றும் வழங்கலுக்கு ஏற்பவே முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விலை உயர்வு எதிர்வரும் ஜனவரி மாதம் வரை நீடிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.









