இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காரவும் அவரது மனைவி யெஹாலியும், காலிக் கோட்டைக்குள் அமைந்துள்ள சுமார் 120 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வீட்டொன்றை வாங்கி, அதன் வரலாற்று மற்றும் கட்டடக்கலை சிறப்புகளைப் பாதுகாத்தவாறு நவீன சொகுசு இல்லமாக மாற்றியுள்ளனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைப் பகுதிக்குள் அமைந்துள்ள சுமார் 120 ஆண்டுகள் பழமையான டச்சு காலத்து வீட்டையே சங்கக்கார தம்பதியினர் 2008ஆம் ஆண்டு வாங்கியுள்ளனர். அந்த வீட்டைக் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் அதன் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகக் கூறும் சங்கக்காரா, “இதுதான் நமக்கு ஏற்ற வீடு” என்று தாங்கள் முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால் வீட்டை வாங்கிய பின்னர் முதல்முறையாக அதன் உட்பகுதிக்குள் சென்றபோது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டு உட்பகுதி மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்திருந்தது.
பழமையான கட்டிடத்தின் தனித்துவத்தைப் பாதுகாத்தபடியே அதனை நவீன குடும்ப இல்லமாக மாற்றுவதற்காக கட்டிடக் கலைஞர்கள் ஜீவன் டி சோசா, முராத் இஸ்மாயில் மற்றும் உட்புற வடிவமைப்பாளர் அன்னிகா பெர்னாண்டோ ஆகியோரின் உதவியை சங்கக்கார தம்பதியினர் நாடினர்.
வீட்டின் பழமையான கட்டமைப்பை அழிக்காமல், இலங்கையின் பாரம்பரிய கலை மற்றும் கட்டடக்கலை அம்சங்களுடன் நவீன வசதிகளை இணைப்பதே இந்த மறுசீரமைப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது.
நான்கு படுக்கையறைகளைக் கொண்ட இந்த இல்லத்தில் மூன்று முற்றவெளித் தோட்டங்கள் உள்ளதுடன், கூரையில் நீச்சல் குளமும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க காலி கலங்கரை விளக்கத்தின் அழகிய காட்சியையும் ரசிக்க முடியும்.
வீட்டின் ஒவ்வொரு அறையிலும் கலைப்படைப்புகள் மற்றும் பழங்காலப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன.









