மக்களின் முதன்மையான பிரச்சினையாக உள்ள குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான திட்டங்களை விரைவாகக் கண்டறிந்து, அவற்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மக்களின் தற்போதைய தேவைகள் குறித்து அவதானம் செலுத்தி திட்டங்களை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, மக்களுக்கு போதுமான குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்த முடியாமல் போவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
தேசிய குடிநீர், சமூக நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவத் திட்டங்களின் தற்போதைய நிலைமை, வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் முன்னேற்றம் மற்றும் தேவைகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக தொடர்புடைய அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.
குறித்த திட்டங்களை விரைவாகக் கண்டறிந்து, அவை ஆரம்பிக்கப்படக்கூடிய திகதி, தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அவை நிறைவடையும் திகதி குறித்த அறிக்கையைத் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, அதன்போது எக்காரணம் கொண்டும் நிதிப் பிரச்சினையை ஒரு தடையாகக் கருத வேண்டாம் எனவும், திட்டங்களைத் தயாரித்து அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் குறித்த கோரிக்கைகளை முன்வைக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.
மேலும், இத்திட்டங்களைச் செயல்படுத்தும்போது வெளிநாட்டுப் கடன்களுக்காகக் காத்திருக்காமல், முடிந்தவரை உள்நாட்டு நிதியைக் கொண்டு அவற்றை நிறைவு செய்வதில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, திட்டங்களைத் தயாரிப்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களைப் பணியமர்த்திக் கொள்ளுமாறும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தினார்









