உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
அதனை முன்னிட்டு இன்று நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
ஒவ்வொரு தேவாலயங்களிலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறுமென தேசிய கத்தோலிக்க தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட ஆராதனை நடைபெற்றது.
கட்டுவாப்பிட்டி தேவாலயத்திலும் விசேட ஆராதனைகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.
இதனிடையே ஆயர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் ‘பிரார்த்தனை நடைபவனி’ இன்று மாலை 4.00 மணிக்கு நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா மைதானத்தில் ஆரம்பமாகி கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியான் தேவாலயத்தை சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் தேதி, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (Easter Sunday) தேவாலயங்கள் மற்றும் ஆடம்பர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுவெடிப்புகளில், 270-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் .
500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.









