நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையை தொடர்ந்து வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊவா, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் வட மாகாணங்களில் அமைந்துள்ள ஆற்று நீரேந்துப் பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனால் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு வெள்ள அபாய நிலை உருவாகலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கமைய அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஆற்றுப் படுக்கைகளை அண்மித்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே குறித்த மாவட்டங்களில் ஆறுகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளிலும், நதிக்கரைகளிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அனர்த்த நிலைகள் தொடர்பில் 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கமுடியும்.









