மத்திய மலைநாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நுவரெலியா பிரதான நகரம், ஹாவா எலிய, கந்தப்பளை, நானுஓயா, டெஸ்போட், ரதல்ல குறுக்கு வீதி மற்றும் தலவாக்கலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கடும் குளிருடனான காலநிலை நிலவி வருகிறது.
இதனுடன் பல பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டமும் காணப்படுவதால், வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக எதிரே வரும் வாகனங்களை அவதானிப்பதில் சிரமம் ஏற்படுவதால், மலைப்பாதைகளில் வாகனங்களை மிகவும் அவதானமாகவும் குறைந்த வேகத்திலும் செலுத்துமாறு சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா – கண்டி, நுவரெலியா – ஹட்டன் மற்றும் தலவாக்கலை உள்ளிட்ட பிரதான வீதிகளிலும், குறுகிய மலைவளைவுகள் மற்றும் சரிவுகள் உள்ள பகுதிகளிலும் பனிமூட்டம் அதிகரித்துள்ளது.
இதனால், அவசரமின்றி பயணிக்குமாறும், வாகனங்களின் முன்விளக்குகளை பயன்படுத்தி, முன்னால் செல்லும் வாகனங்களுடன் போதிய இடைவெளியை பேணுமாறும் சாரதிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இதேவேளை, கடும் குளிர் காரணமாக நுவரெலியா மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அன்றாட நடவடிக்கைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.








