எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் பல்வேறு முக்கிய தேவைகளுக்காக செல்லுபடியாகும் வரி செலுத்துபவரின் அடையாள இலக்கமான TIN சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டத்தின் கீழ் இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது.
இதன்படி, வங்கிக் கணக்கை ஆரம்பித்தல், கட்டிடத் திட்ட அனுமதியைப் பெறுதல், மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்தல் மற்றும் அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்தல், காணி அல்லது காணி உரிமையைப் பதிவு செய்தல், வணிகத்தைப் பதிவு செய்தல், நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் கடன் அட்டை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு TIN சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
குறித்த சேவைகளை வழங்கும் அதிகாரிகள், விண்ணப்பதாரரிடம் செல்லுபடியாகும் TIN சான்றிதழ் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை TIN இலக்கம் பெற்றுக்கொள்ளாதவர்கள், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையவழி சேவையின் ஊடாக TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.







