பெருந்தோட்டங்களைச் சார்ந்த மக்களுக்கு 10 பேர்ச் காணித் துண்டுடன் வீடுகளை வழங்குவது அரசாங்கத்தின் கொள்கையாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் கீழ், இதுவரை அரைகுறையாக இருந்த 962 வீட்டு அலகுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 629 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ள 333 வீடுகள் விரைவில் பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.
பேரிடர் வீடமைப்புத் திட்டங்கள், இந்திய வீடமைப்புத் திட்டம் மற்றும் பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டங்கள் ஆகியவை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பேரிடர் வீடமைப்புத் திட்டத்தின் கீழ், மாவட்டச் செயலகங்கள் ஊடாக 392 வீட்டு அலகுகளின் நிர்மாணப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
அத்துடன், மேலும் 118 வீட்டு அலகுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், அவை பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளன.
இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் 10,000 வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தில், மொத்தம் 1,300 வீட்டு அலகுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.
இதில் 522 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அவை பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.
மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் மேலும் 2,529 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச் காணியுடன் வீடு வழங்குவது அரசாங்கத்தின் கொள்கை என மீண்டும் வலியுறுத்திய பிரதமர், அதற்கமைய தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இந்திய நிதியுதவி வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வீடு பெறுவதற்கான அடிப்படை தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ள 2,184 பயனாளிகளுக்காக 129 பெருந்தோட்டங்களில் வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் பெருந்தோட்ட சமூகத்தினரின் நீண்டகால வீடமைப்பு மற்றும் காணி உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெருந்தோட்டப் பகுதிகளுக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை (NEVIDA) க்கு நேரடியாக தனியான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
அதற்குப் பதிலாக, அந்த அதிகாரசபையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு தேவையான நிதி, பெருந்தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்படும் நிதி மூலம் வழங்கப்படுவதாக அவர் விளக்கியுள்ளார்.
அதன்படி, NEVIDAவின் செயற்பாடுகளுக்காக 2025ஆம் ஆண்டில் 42.5 மில்லியன் ரூபாவும், 2026ஆம் ஆண்டில் 85 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையுடன் கூடிய நிரந்தர வீடுகளை வழங்குவதுடன், அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.








