அரசாங்கத்திற்கு சொந்தமான 3 பெருந்தோட்ட நிறுவனங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்போதைய மற்றும் முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலுவையிலுள்ள ETF மற்றும் EPF நிதியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய மொத்தமாக 4500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை அரசாங்கம் வழங்கவுள்ளது.
அது தொடர்பான ஆரம்ப நிகழ்வு நாளை கண்டி மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 961 மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகையும், ஜனதா தோட்ட அபிவிருத்தி சபையைச் சேர்ந்த 6 ஆயிரத்து 123 தொழிலாளர்களுக்கு 2 ஆயிரத்து 24 மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகையும் வழங்கப்படவுள்ளது.
அத்துடன், எல்கடுவ தோட்ட நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரம் தொழிலாளர்களுக்கு 503 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை வழங்கப்படவுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் சமூகச் சவால்களைக் கருத்தில் கொண்டு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த விதானபத்திரனாவின் முயற்சியில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அனுமதி வழங்கியதையடுத்து நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









