இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
இன்றைய தினம் முற்பகல் 10.30 மணி முதல் நாளை மறுதினம் முற்பகல் 10.30 மணி வரை குறித்த எச்சரிக்கை அறிவிப்பு அமுலில் இருக்குமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய காங்கேசன்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடல் பிராந்தியங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்கள் சில வேளைகளில் கொந்தளிப்புடன் காணப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேற்குறிப்பிட்ட கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவ மற்றும் கடற்படை சமூகத்தினர் மிகவும் அவதானமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.









