முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கு ஒன்றில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டு மே தினப் பேரணியில் பங்கேற்ற தனது ஆதரவாளர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக, பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ரூ, 330,000 தொகையை விடுவித்ததாக வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தச் செயற்பாட்டின் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் முடிவில், கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னாள் அமைச்சரை குற்றவாளியாகக் கண்டறிந்து 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.









