ஊடகவியலாளர்களுக்கான “ஹோமாகம வீடமைப்புத் திட்டத்தின்” கீழ் வீடுகளைப் பெற்றுக்கொள்வதற்காகத் தகுதியான ஊடகவியலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகச் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.
அச்சு, இலத்திரனியல் மற்றும் இணையவழி (Online) ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்காக இந்தக் குடியிருப்புத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:
குடியுரிமை & சொத்து: விண்ணப்பதாரர்கள் இலங்கையின் நிரந்தரக் குடிமக்களாக இருக்க வேண்டும் என்பதுடன், அவர்களுக்குச் சொந்தமாக வீடோ அல்லது வீடு கட்டுவதற்குப் பொருத்தமான காணியோ இருக்கக் கூடாது.
சேவைக் காலம்: ஊடகத்துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்திருக்க வேண்டும்.
வயது எல்லை: விண்ணப்பதாரர்கள் 30 முதல் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் தலா 500 சதுர அடி பரப்பளவு கொண்ட 27 வீட்டு அலகுகள் வழங்கப்படவுள்ளன. தொழில்முறை அனுபவம் மற்றும் ஏனைய தகுதிகளை அடிப்படையாகக் கொண்டே பயனாளிகள் தெரிவு செய்யப்படுவர் என அமைச்சு தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்களைச் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.media.gov.lk ஊடாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பதிவுத் தபாலில்
“செயலாளர், சுகாதார மற்றும் ஊடக அமைச்சு, இல. 163, அசிதிசி மெதுர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை அமைச்சின் ஊடகப் பிரிவிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.









