உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் நாட்டில் நிலவும் வறண்ட வானிலைக்கு மத்தியில், நீர் மற்றும் மின்சாரத்தைச் சேமிக்க அனைத்து அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொதுமக்கள் பொறுப்புடன் பங்களிக்க வேண்டும் என்று அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அனைத்து அரச மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களிலும் எரிபொருள் மற்றும் எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். தற்போதைய எரிசக்தி சிக்கல்கள் மற்றும் மழைவீழ்ச்சி குறைவினால் ஏற்படக்கூடிய நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள அரச துறையின் அதிகபட்ச பங்களிப்பு அவசியமானது என அமைச்சர் குறிப்பிட்டார்.
“உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தணியும் வரை, ஒரு நாடாகவும் சமூகமாகவும் நாம் அனைவரும் இந்தச் சிக்கன நடவடிக்கைகளுக்குப் பழக வேண்டும். வீடுகளில் அவசியமற்ற மின்விளக்குகளை அணைப்பதுடன், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் பொறுப்பு உங்கள் அனைவருக்கும் உள்ளது” என அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்னவின் முழுமையான அறிக்கை
“தற்போது நாட்டில் வறட்சியான மற்றும் வெப்பமான காலநிலை நிலவுகிறது. மழைவீழ்ச்சி தொடர்பில் சில சிக்கல்கள் ஏற்படலாம் என முன்னறிவிப்புகள் உள்ளன. எனவே, தற்போதுள்ள நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவதானம் செலுத்தி, எரிசக்தி மற்றும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அனைத்து அரச மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் அரசாங்கம் அறிவுறுத்துகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தலைவர்களுடன் நிறுவன ரீதியாக மின்சாரத்தைச் சேமிப்பது குறித்து கலந்துரையாடினோம். குறிப்பாக வீதி மின்விளக்குகளை நிர்வகிப்பதன் மூலம் அதிக மின்சாரத்தைச் சேமிக்க முடியும் என நாம் இனங்கண்டுள்ளோம். மாலை 6 மணி முதல் இரவு வரை மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும் நேரத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். வீதி விளக்குகளை ஒளிரச் செய்வதைச் சற்றுத் தாமதப்படுத்துவதன் மூலம் மின்சாரத்தைச் சேமிக்க முடியும். அதேபோல், காலையில் விளக்குகளை அணைப்பதற்கான முறையான திட்டத்தை உள்ளூராட்சி மன்றங்கள் பொதுமக்களின் உதவியுடன் முன்னெடுக்க வேண்டும்.
மேலும், அலுவலகங்களில் அவசியமற்ற மின்விசிறிகள், மின்விளக்குகளை அணைப்பதற்கும், மின்தூக்கி (Lifts) பயன்பாட்டைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தும் விளம்பரப் பலகைகளை இரவில் அணைத்து வைக்க வேண்டும்.
ஒவ்வொரு பிரஜையும் தத்தமது வீடுகளில் மின்சாரம் மற்றும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றேன். குறிப்பாக, வாகனங்களைக் கழுவுவதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, குடிநீரை அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். இந்த உலகளாவிய நெருக்கடி தீரும் வரை ஒரு சமூகமாக ஒன்றிணைந்து செயற்படுவோம்.”









