நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லையென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எவ்வித இடையூறுமின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான இருப்பு மற்றும் வசதிகள் தம்மிடம் இருப்பதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருண தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல், இலங்கையின் எரிபொருள் இறக்குமதியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய 90,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிய கப்பல் ஒன்று, எதிர்வரும் 11ம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் புஜைரா துறைமுகத்திலிருந்து குறித்த கப்பல் இலங்கையை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.









