நாட்டில் அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாட்டிற்கமைய, இவ்வாண்டு இறுதிக்குள் டிஜிட்டல் அடையாள அட்டைகளை பொதுமக்களுக்கு வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான திட்டமிடப்பட்ட எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு இறுதிக்குள் ஒரு தனிநபரின் அடையாளத்தை 100 சதவீத துல்லியத்துடன் சரிபார்க்கக்கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை பொதுமக்களுக்கு வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தற்போது பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக தனிநபர்களின் பயோமெட்ரிக் தரவைப் பயன்படுத்துவதன் மூலம், குடிமக்கள் எந்த இடத்திலும் அவர்கள் யார் என்பதை துல்லியமாக நிரூபிக்க முடியும்.
இது அரச நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய முறையை செயல்படுத்துவதன் மூலம், மக்கள் அரச அலுவலகங்களுக்கு நேரில் பணிகளை மேற்கொள்வதற்கான தேவை குறைவடையும்.
நிதி மோசடிஇ, திருட்டு மற்றும் வேறொருவரைப் போல ஆள்மாறாட்டம் செய்வதன் மூலம் செய்யப்படும் பல்வேறு முறைகேடுகளைத் தடுக்கவும் இது பயன்படுமென அரசாங்கம் வலியுறுத்துகின்றது.
இந்த டிஜிட்டல் அடையாள அட்டையின் அறிமுகம் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் ஒரு தீர்க்கமான காரணியாக இருக்குமென டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.









