கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவை அரசியல்மயமாக்க வேண்டாமென வட மாகாண மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
வட மாகாண கடற்றொழில் இணையத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய உறுப்பினருமான அன்னலிங்கம் அன்னராசா அது குறித்த கோரிக்கையியை முன்வைத்துள்ளார்.
கச்சத்தீவு ஆலய வருடாந்த திருவிழாவை எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருவிழாவில் பங்கேற்பதற்காக கச்சத்தீவுக்கு வருகை தரும் இந்திய மீனவர்கள், அதன்போது இலங்கை – இந்திய மீனவ விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடக் கூடாதெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தை யாத்திரைத் தளமாக மாத்திரம் பயன்படுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய சட்ட சபைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் நீண்ட காலமாக நிலவி வரும் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தேர்தலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் நடைபெறவுள்ள கச்சத்தீவு திருவிழாவை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தக்கூடாதென தமிழக அரசாங்கம் மற்றும் மீனவர்களிடம் கோரிக்கை விடுப்பதாக அன்னலிங்கம் அன்னராசா குறிப்பிட்டுள்ளார்.









