இலங்கை மக்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடிவருகின்றனர். நத்தார் பண்டிகையை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் விசேட வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நத்தார் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கையர்களாகிய நாம், ஒரு நாடாக, மிகவும் வேதனையான இயற்கை பேரழிவை எதிர்கொண்ட பின்னர், உறுதியுடன் மீண்டுவரும் சந்தர்ப்பத்திலேயே நத்தார் பண்டிகையை கொண்டாடுகிறோம் என்பது அனைவரும் அறிந்த விடயம். அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பகிர்வு மற்றும் தியாகம் ஆகியவையே நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தங்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு சகோதர உணர்வுடன் ஆதரவு வழங்குதல் மற்றும் மனிதகுலத்தின் விடுதலைக்கான அர்ப்பணிப்பு என்பன இவற்றில் முதன்மையானதாகும். கிறிஸ்தவம் உட்பட அனைத்து மதங்களின் போதனையான, இக்கட்டான காலங்களில் அயல் வீட்டாரை கைவிடாமல் சகோதரத்துவத்துடன் அரவணைக்கும் உன்னதமான மனிதப் பண்பையும், அசைக்க முடியாத உறுதியையும் கடந்த அனர்த்த நிலைமையில் நாட்டு மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர். யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொண்டு, சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் என ஜனாதிபதி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம், இரக்கம் மற்றும் கருணை ஆகியவற்றால் நிறைந்த இனிய நத்தார் பண்டிகையாக அமைய வேண்டும் என்று அனைவரைக்கும் ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.









