நாட்டுக்கு வருகைதந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் டொக்டர் எஸ். ஜெய்சங்கர் இன்று (23) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இருவருக்குமிடையில் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு நடவடிக்கைகள், நிவாரணம் மற்றும் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் செயற்பாடுகளுக்கு இந்திய பிரதமர் மற்றும் அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தல்களின்படி இலங்கையில் முன்னெடுக்கப்படும் மீள்கட்டமைப்பு செயற்பாடுகளுக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கப்படுமெனவும், தேவையான ஏனைய உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன் இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிவாரணப் பொதியை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய-இலங்கை உறவுகளில் இந்த தனித்துவமான ஒத்துழைப்பு ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதிக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் தொடர்ந்து இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடல்களில் பொருளாதாரம், வர்த்தகம், விவசாயம், சுகாதாரம், எரிசக்தி மற்றும் வீட்டுவசதி கட்டுமானத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என இந்திய வெளியுறவு அமைச்சர் டொக்டர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.









