FIFA Series அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இலங்கை கால்பந்து சர்வதேச அரங்கில் முக்கிய முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024 மார்ச் மாதம் கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது FIFA Series போட்டித் தொடரை இலங்கை நடத்தியது.
நான்கு நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டித் தொடரில் இலங்கையுடன் பூட்டான், மத்திய ஆபிரிக்கக் குடியரசு மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகள் பங்கேற்றிருந்தன.
இந்தத் தொடரை நடத்துவது ஒரு சர்வதேச கால்பந்து போட்டியை ஏற்பாடு செய்வதைத் தாண்டி, இலங்கை கால்பந்து உலக அரங்கில் தனக்கான இடத்தை நிலைநிறுத்துவதற்கான முக்கிய அறிக்கையாக அமைந்ததாக ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கால்பந்து வளர்ச்சிக்கு சர்வதேச போட்டி வாய்ப்புகள் முக்கியமானவை என சுட்டிக்காட்டிய அவர், கால்பந்தில் இன்னும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கும் சர்வதேச அளவில் போட்டியிடவும், அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளவும், எதிர்கால இலக்குகளை உருவாக்கவும் இத்தகைய தொடர்கள் வாய்ப்பளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானமும் FIFA-வின் இலங்கை கால்பந்துக்கான தொடர்ச்சியான ஆதரவின் அடையாளமாக விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
FIFA Forward Programme திட்டத்தின் கீழ் மைதானத்தை சர்வதேச போட்டிகளுக்கு ஏற்ற வகையில் புனரமைத்து தயார்படுத்துவதற்கான ஆதரவு வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் FIFA உறுப்பினர் நாடுகளில் உள்கட்டமைப்பு மற்றும் கால்பந்து திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குகிறது.
இதன் மூலம், சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான இலங்கையின் உள்கட்டமைப்பு திறன் மேம்பட்டுள்ளதுடன், வளர்ந்து வரும் இலங்கை கால்பந்துக்கு உலகளாவிய போட்டி அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளதாக கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.









