பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 23 பில்லியன் ரூபா ) பணத்தை வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படும் 34 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதானை பகுதியைச் சேர்ந்த குறித்த வர்த்தகரை நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் (FCID) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2023 முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் குறித்த பணப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கொடுப்பனவுகள் என்ற போர்வையில், Telegraphic Transfer (T/T) முறையைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பெருந்தொகையான பணம் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர், இலங்கை ரூபா மதிப்பில் சுமார் 23 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பணப் பரிமாற்றங்கள் உண்மையான இறக்குமதிக் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடையவையா என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் FCID மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








