22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் இன்று இரண்டாம் வாசிப்பின்போது, 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், எந்தவொரு உறுப்பினரும் வாக்களிப்பில் இருந்து விலகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் உயர்நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதனையடுத்து, உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன கடந்த 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
அதன்படி, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடுகளுக்கும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை என உயர்நீதிமன்றம் தீர்மானித்திருந்தது. அதேவேளை, சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்று மற்றும் இன்று பாராளுமன்றில் இடம்பெற்றது.
இந்நிலையில், இன்று இரவு சுமார் 7.15 மணியளவில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 158 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 63 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்ததைத் தொடர்ந்து, சட்டமூலம் இரண்டாம் வாசிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.






