“வனஸ்பதி” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் 20 காடுகளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான நிகழ்வு சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்திகே தலைமையில் நாளை நுவரெலியா சததென்ன வனக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இதன்படி, நுவரெலியா, கேகாலை, அம்பாறை, பதுளை, வவுனியா மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளன. இவ்வாறு பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ள காடுகளின் மொத்த நிலப்பரப்பு சுமார் 9,538 ஹெக்டேயர்கள் என சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் சுற்றாடல் அமைச்சு, வனப்பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து நாட்டின் வன வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இதுவரை 93 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், இன்று வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ள 20 காடுகளையும் சேர்த்துக் கொண்டால், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள காடுகளின் மொத்த நிலப்பரப்பு சுமார் 65,000 ஹெக்டேயர்களாக அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வன வளங்கள், உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் “வனஸ்பதி” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்கால சந்ததியினருக்காக நாட்டின் வனப்பகுதிகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.








