பொலன்னறுவை–ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா 7ஆம் கட்டை தேவாலய வளைவு பகுதியில் இன்று (10) அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
மெதிரிகிரியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றே அதிகாலை சுமார் 4.45 மணியளவில் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கால்வாயில் கவிழ்ந்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 22 பேரும் சிகிச்சைக்காக ஹபரணை மற்றும் ஹிங்குராங்கொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற விதம் மற்றும் பஸ் வீதியை விட்டு விலகியதற்கான காரணம் தொடர்பில் மின்னேரியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, குறித்த தேவாலய வளைவு பகுதி அடிக்கடி வீதி விபத்துகள் இடம்பெறும் பகுதியாகக் கருதப்படுவதால், அப்பகுதியில் வீதி பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து மீண்டும் கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.








