ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று (06) கட்சியின் தலைமையகமான சிரிகொத்தவில் நடைபெற்றது.
கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
சர்வமதத் தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமான நிகழ்வில், நாட்டுக்கும் மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய மறைந்த முன்னாள் தலைவர்களுக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதேவேளை, மலையக மக்களின் உரிமைகள், வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முன்னாள் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களுக்கும் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
80 ஆண்டுகால அரசியல் பயணத்தை நிறைவு செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வில், கட்சியின் கடந்தகால தலைவர்கள் மற்றும் அவர்களின் சேவைகள் நினைவுகூரப்பட்டன.








