இலங்கையில் வரலாறு காணாத உச்சபட்ச வெப்பநிலை நிலவி வருவதாகவும், சில பகுதிகளில் வெப்பநிலை 40°C ஐ நெருங்கியுள்ளதாகவும் வானிலை ஆய்வுத் துறையின் வானிலை ஆய்வாளர் மாலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதற்கமைய எல் நினோ தாக்கத்தினால் நாட்டின் 7 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 25,628 குடும்பங்களைச் சேர்ந்த 81,865 பேர் எல் நினோ நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
எனவே பாதிக்கப்பட்டுள்ள 20 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குடிநீரை விநியோகிக்க அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிகளவிலான குடிநீர் மொனராகலை மாவட்டத்திற்கே விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள 7 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 10,264 குடும்பங்களைச் சேர்ந்த 33,023 பேருக்குக் குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 9,547 குடும்பங்களை உள்ளடக்கிய 28,523 பேருக்குக் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் 02 பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிக்கப்பட்டுள்ள 2,537 குடும்பங்களைச் சேர்ந்த 7,882 பேருக்கும் அதிகளவில் குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.









