மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற கொலை கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைதானவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை 4 தினங்களுக்கு தடுத்துவைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் சந்தேக நபர்களிடம் நகைகளை கொள்வனவுசெய்த நகைக்கடை உரிமையாளர்களுக்கு எதிர்வரும் 27ம் திகதி வரையில் விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 20ம் திகதி வெள்ளிக்கிழமை வவுணதீவு பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கொத்தியாபுலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடத்தப்பட்டு அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர்,
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட நெல்லியடி வயல் பிரதேச கிணற்றினுள் தள்ளப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இவ்வாறாக இடம்பெற்ற சம்பவமொன்றில் கொல்லப்பட்ட பெண்ணின் சடலமொன்றும் குறித்த கிணற்றினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ரி.மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினரினால் முன்னெடுக்கப்பட்ட துரித நடவடிக்கையின் மூலம் பிரதான சந்தேகநபர்கள் மூவர் அடங்கிய ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 27ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.









