வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை இன்றுமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
வாகன இலக்கத்தகட்டின் இறுதியிலக்கம் ஒற்றை எண்ணாக காணப்படும் வாகனங்களுக்கு இன்றைய தினம் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் பூச்சியம் மற்றும் இரட்டை எண்களைக் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியுமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் எஸ். ராஜகருணா குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் நிலையங்களில் நிலவும் நீண்ட வரிசைகளை மட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு, குறித்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, QR குறியீட்டைத் தரவிறக்கம் செய்வதில் நிலவிய தொழில்நுட்ப பிரச்சினைகள் தற்போது முழுமையாகச் சீர்செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பதிவு செய்தபோது கிடைக்கப்பெற்ற கடவுச்சொல்லை தற்போது பெற்றுக்கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில், வாடிக்கையாளர்கள் தமது தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவே QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் எஸ். ராஜகருணா மேலும் தெரிவித்துள்ளார்.









