அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள கல்விச் சீர்திருத்தங்கள் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் சகல வகுப்புகளுக்கும் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கல்விச் சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கத்தின் இரத்தினபுரி மாவட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இக்கல்விச் சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும். இந்த ஆண்டில் 01 மற்றும் 06 ஆம் தரங்களுக்கான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
அடுத்த ஆண்டில் 02 மற்றும் 07 ஆம் தரங்களுக்கான சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும்.
இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 2028ஆம் ஆண்டில் 03 மற்றும் 08 ஆம் தரங்களுக்கும், 2029ஆம் ஆண்டில் 04 மற்றும் 09 ஆம் தரங்களுக்கும் கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில் தரம் 9 வரையிலான முழுமையான பாடத்திட்டங்களும் மறுசீரமைக்கப்படவுள்ளன.
இந்தச் சீர்திருத்தங்களுக்குத் தேவையான பாடத்திட்டங்களை உருவாக்குவதில் கல்வி நிபுணர்கள் இணைந்துள்ளனர்.
முதலாம் தரத்திற்கான சீர்திருத்தங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும், 06 ஆம் தரத்திற்கான பாடத்திட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பிரஜைகளை உருவாக்குவதே இந்தச் சீர்திருத்தங்களின் பிரதான நோக்கமென அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.









