இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னி மோரி புத்த பெருமானின் புனித சின்னங்களை வழிபடுவதற்கு இன்று முதல் பொதுமக்கள் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு ஹூணுபிட்டி கங்காராம விகாரையில் வைக்கப்பட்டுள்ள புனித சின்னங்களை பார்வையிட்ட ஜனாதிபதி மலர் தூவி வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இன்றுமுதல் எதிர்வரும் 11ம் திகதி வரை பொதுமக்களுக்கு அதனை தரிசிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அரவல்லி மாவட்டத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க தெவ்னி மோரி தொல்பொருள் தளத்திலுள்ள புத்த மடாலய வளாகத்தில் , தூபியின் அருகே 1960களில் நடத்தப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் போது குறித்த புனிதச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இரண்டு புனித கலசங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவற்றில் ஒன்றில் புத்த பெருமானின் புனித சின்னங்கள் கிடைக்கப்பெற்றன.
கலசத்திலிருந்த கல்வெட்டில், புத்த பெருமானின் புனிதச் சின்னங்கள் வைக்கப்பட்ட இடமென எழுதப்பட்டிருந்தமை அதன் புனிதத்தை மேலும் உறுதிப்படுத்தும் சான்றென்பது குறிப்பிடத்தக்கது.









