இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்திலுள்ள புளோரெஸ் தீவுப் பகுதியில் இன்று அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கத்தால் நிலபரப்புகள் பலமாக அதிர்ந்துள்ளன. மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி எண்டே நகரத்திற்கு வடமேற்கே 68 கிலோமீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதலாவது நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் 5.6 மற்றும் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த தொடர் அதிர்வுகளும் பதிவாகியுள்ளன. எனவே தெற்கு சுலவேசி மற்றும் கிழக்கு நுசா தெங்காரா ஆகிய கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் வாபஸ் பெறப்பட்டதாக இந்தோனேசிய புவியியல் மற்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலஅதிர்வின் தீவிரத்தால் மருத்துவமனைகள், வீடுகள், பாலங்கள் மற்றும் வணிகக் கட்டிடங்கள் பலத்த சேதமடைந்து இடிந்து வீழ்ந்துள்ளன.
இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








