மாலைதீவு – இலங்கை வர்த்தக மன்றம், மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மற்றும் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோரின் பங்கேற்புடன் கொழும்பில் நடைபெற்றது. மாலைதீவு பொருளாதார அபிவிருத்தி, போக்குவரத்து மற்றும் வர்த்தக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் மாலைதீவு மற்றும் இலங்கையின் முன்னணி வர்த்தகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அரை நூற்றாண்டுக்கும் மேலான இரு நாடுகளுக்கிடையிலான அரசியல் நம்பிக்கை, மக்களுக்கிடையிலான நெருங்கிய தொடர்பு மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட நட்புறவை, பன்முக ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதே தமது எதிர்பார்ப்பு என மாலைதீவு – இலங்கை வர்த்தக மன்றத்தில் உரையாற்றிய மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு குறிப்பிட்டார்.
மாலைதீவு “முன்னேறிச் செல்லும் ஒரு தேசம்” எனச் சுட்டிக்காட்டிய அவர், அபிவிருத்தியடைந்த, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான தேசமாக மாறுவதே தமது நாட்டின் இலக்கு என்றும், இந்த அபிவிருத்தி அணுகுமுறை மக்கள் மையப்படுத்தப்பட்ட, தொழில்நுட்பத்தால் பலப்படுத்தப்பட்ட மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டது என்றும் மாலைத்தீவு ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை மாலைதீவின் அண்டை நாடு மட்டுமல்ல, மிக முக்கியமான மூலோபாய பங்காளியும் கூட என அவர் வலியுறுத்தினார். மாலைதீவு வர்த்தகர்கள் இலங்கையில் தமது முதலீடுகளை விரிவாக்க ஆர்வமாக உள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு முதலீடுகள் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மிக முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தைத் தாங்கும் திறன் மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகியவற்றில் இலங்கையின் அனுபவமும் திறமையும் மாலைதீவின் எதிர்காலப் பயணத்திற்குப் பெரும் பலமாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவை நவீன பொருளாதாரப் பங்களிப்பாக மாற்ற வேண்டிய தருணம் வந்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையைப் பாதித்த ‘டித்வா’ சூறாவளி மற்றும் உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், இலங்கை வரலாற்றில் அதிகூடிய வருடாந்த சுற்றுலாப் வருகையை 2025 இல் பதிவு செய்துள்ளதாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.









