கொழும்பின் பல பகுதிகளில் தற்போது நடைமுறையிலுள்ள திட்டமிடப்பட்ட நீர்வெட்டு நேரத்தை மேலும் குறைப்பது தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கவனம் செலுத்தியுள்ளது.
தற்போது 18 மணிநேரமாக உள்ள நீர்வெட்டு நேரத்தை 12 அல்லது 8 மணிநேரமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீர் வழங்கல் சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.
நிலவும் கடும் வறட்சி காரணமாக பல பகுதிகளில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை 24 மணிநேர நீர்வெட்டு அறிவிக்கப்பட்டிருந்தது.
மக்களின் அசௌகரியத்தைக் கருதி தற்போது குறித்த நேரம் 18 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சுமார் 20,000 நீர் இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீர் விநியோகத்தில் மேலதிகத் தடைகள் ஏற்படும் பட்சத்தில், கொழும்பு மாவட்டத்திற்கு பௌசர்கள் மூலம் நீர் வழங்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.









