மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்நிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தி , கொக்கட்டிச்சோலை நகரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் கிணற்றிலிருந்து பெண் ஒருவரும், இன்னுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும், தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த பாரிய கொள்ளைச் சம்பவம் தொடர்பிலும் பிரதான சந்தேக நபர்கள் மூவர் உட்பட ஐவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நாளைய தினம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்நிலையாகக் கூடாதெனவும், சந்தேக நபர்களுக்கு உயரிய தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.









