ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க AI Impact Summit 2026 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் இந்தியா விஜயம் மேற்கொள்கிறார். செயற்கை நுண்ணறிவை (AI) மனிதகுலத்தின் நலனுக்காகப் பொறுப்புடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மாநாடு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும்இ 45-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்காலப் பயணம் மற்றும் உலகளாவிய சவால்களை வெற்றிக்கொள்ள அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.
இந்திய விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தவுள்ளார்.









