T- 20 உலகக்கிண்ண தொடர் நேற்றைய தினம் ஆரம்பமானது. ஆரம்ப நாளில் 3 போட்டிகள் நடைபெற்றிருந்தன. முதல் போட்டி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்றது. போட்டியில் பாகிஸ்தான் 3 விக்கட்டுகளினால் வெற்றியீட்டியது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து ஆரம்பத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்ட போதும், இறுதி நேரத்தில் விக்கட்டுகளை இழந்து தடுமாறியது. 147 ஓட்டங்களை நெதர்லாந்து துடுப்பாட்ட வீரர்கள் பெற்றுக்கொண்டனர். 148 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 19.3 ஒவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
தொடரின் இரண்டாவது போட்டி மேற்கிந்திய தீவுகள் , ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையில் ஈடுன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் 5 விக்கட்டுகளை இழந்து, 182 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து சகல விக்கட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதேவேளை தொடரின் 3 ஆவது போட்டி இந்திய மற்றும் ஐக்கிய அமெரிக்க அணிகளுக்கிடையில் நடைபெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 161 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்க அணி 8 விக்கட்டுகளை இழந்து 132 ஓட்டங்களையே பெற்று 29 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இன்றைய தினமும் 3 போட்டிகள் நடைபெறவுள்ளது. இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இரவு 7 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.









