நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராமிற்கும் அதிக நிறைகொண்ட ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கோணஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, நிட்டம்புவ – அரலிய வீதி பின்னகொல்லவத்தை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
61 கிலோ 838 கிராம் ஐஸ் போதைப்பொருளை முச்சக்கர வண்டி ஒன்றில் கடத்திச்செல்ல முற்பட்டபோதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 90 கோடி ரூபாவிற்கும் அதிகமென பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களான டுபாய் வருண, மொஹமட் சித்திக் மற்றும் தற்போது சிறையிலுள்ள திலிந்து சஞ்சீவ மற்றும் லேனா ஆகியோரின் நெருங்கிய சகாவென தெரியவந்துள்ளது.









