இலங்கை தற்பொழுது சிறந்த பொருளாதாரத்தைக் கொண்ட, ஊழல் குறைந்த நாடாக சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்று வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
காலி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
ஒரு காலத்தில் கடன் செலுத்த முடியாத, ஊழலும் சமூகக் குற்றங்களும் நிறைந்த நாடாக சர்வதேச அளவில் பேசப்பட்ட இலங்கை, இன்று அந்த நிலையிலிருந்து மாறியுள்ளது.
தற்போதைய சர்வதேச அறிக்கைகளில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூகக் குறியீடுகள் தொடர்பான மதிப்பீடுகள் மிகவும் சிறந்த மட்டத்தில் காணப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
திறைசேரிக்குக் கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயும் நாட்டின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதே தமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று அவர் கூறினார்.
எதிர்கால சந்ததியினர் கடன் செலுத்த அவசியமற்ற, கடுமையான நிதி ஒழுக்கத்தைக் கொண்ட ஒரு நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் இறுதி நோக்கம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது உரையில் உறுதியளித்தார்.









