இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு தொடர்ந்தும் முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
அண்மைக் காலங்களில் இலங்கை பெரும் பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்திய இரண்டு பாரிய அதிர்ச்சிகளை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.
டித்வா சூறாவளி இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு இயற்கை அனர்த்தமெனவும் மேலும் மத்திய கிழக்கு யுத்தம் தொடர்ச்சியான தாக்கம் பற்றியும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும், இலங்கை மக்களும் பொருளாதாரமும் விதிவிலக்கான மீளெழும் திறனை வெளிப்படுத்தியுள்ளதாக ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழான நடவடிக்கைகள் தற்போது பலன் அளிக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதிகாரிகளின் அர்ப்பணிப்பு காரணமாக இலங்கையின் பொருளாதாரச் செயல்பாடு மேம்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு இலங்கை அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதுடன், எதிர்காலத்தில் வழங்கக்கூடிய ஆதரவுகள் குறித்து தீர்மானிக்கப்படுமெனவும், இலங்கைக்கு ஆதரவளிப்பதில் சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்தும் உறுதியுடன் இருப்பதாகவும் ஜூலி கோசாக் குறிப்பிட்டுள்ளார்.









