இலங்கை கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள நவீன தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க ஜப்பான் தயாரென இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இஷெமாட்டா அகியோ தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தூதுவருக்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையில் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவி திட்டங்கள் மற்றும் அவற்றை மேலும் வலுப்படுத்துவது குறித்து அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.
கடற்றொழில் அமைச்சின் எதிர்கால இலக்குகள் மற்றும் இலங்கையின் கடல் வளங்களை வினைத்திறனாக பயன்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் அமைச்சர் தூதுவரிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடற்றொழில் துறையில் ஜப்பான் பெற்றுள்ள நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் இலங்கையின் கடற்றொழில் துறையை நவீனமயப்படுத்துவதற்கும், புதிய புத்தாக்கத் திட்டங்களை செயற்படுத்துவதற்கும் ஜப்பான் அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும், அதற்கான முழுமையான ஒத்துழைப்புகள் வழங்கப்படுமென இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இஷெமாட்டா அகியோ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் குறித்த சந்திப்பு அமைந்திருந்தது.









