அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு இராஜதந்திர முயற்சிகளின் பயனாகவே இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியை இலங்கையில் நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டிக்காக விசேட பாதுகாப்பும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வீரர்களினதும் இரசிகர்களினதும் பாதுகாப்பிற்கு அரசாங்கம் முழுப்பொறுப்பையும் ஏற்றுள்ளதையும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பு நகருக்குள் நெரிசலைத் தவிர்க்ககும் வகையில் பொலிசார் விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை அமுல்படுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேற்படி போட்டியில் பங்கேற்பதில்லை என பாகிஸ்தான் அரசாங்கம் ஏற்கனவே எடுத்திருந்த தீர்மானத்தை இலங்கையின் தலையீட்டின் பின்னர் மாற்றிக்கொண்டமையை அரசாங்கம் பாராட்டுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த கிரிக்கெட் போட்டி நடைபெறாத சூழ்நிலையே காணப்பட்டது. எவ்வாறாயினும், கடந்த சில நாட்களாக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு இராஜதந்திர முயற்சிகளின் விளைவாக தற்போது இந்தப் போட்டியை இலங்கையில் நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற விசேட தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உத்தியோகபூர்வ சம்மதத்தை வழங்கியுள்ளது.
போட்டியைக் காண பெருமளவிலான இரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களின் நலன் கருதி விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.









