போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு ‘குறைப்புப் புள்ளிகள்’ வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாத இறுதியிலிருந்து திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் வீதிப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
கேகாலையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
GovPay ஊடாக அபராதப் பணத்தைச் செலுத்தும் முறைமை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படுவதோடு, புள்ளி வழங்கும் முறைமையும் ஆரம்பிக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே போதைப்பொருள் பாவித்தபின் வாகனம் செலுத்திய சாரதிகளுக்கு எதிராக ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 300 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் பாவனையைக் கண்டறிவதற்காகப் பொலிஸ் மா அதிபரால் புதிய பரிசோதனை உபகரணமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், அது நாளை முதல் பயன்பாட்டிற்கு வருமெனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிப்பாகங்களை அகற்றாது வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர வலியுறுத்தினார்.









