புத்தளம் ரயில் வீதியில் கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் வரையான ரயில் சேவைகள் இன்று (29) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டிருந்த ரயில் வீதியில் திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதையடுத்து,ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாத இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக, புத்தளம் ரயில் வீதியில் குடாவெவ மற்றும் மாதம்பை ரயில் நிலையங்களுக்கு இடையே காணப்படும் கடுபிட்டி ஓயா பாலத்திற்கு அருகில் ரயில் வீதி நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
அதன் காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் சிலாபம் ஃ புத்தளம் இடையிலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுஃ
அதன் காரணமாக சிலாபம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 ரயில் பெட்டிகளை போக்குவரத்துக்காகப் பயன்படுத்த முடியாமல் போனதுடன் குறித்த மார்க்கத்தின் ரயில் சேவைகள் நாத்தாண்டியா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொழும்பு கோட்டை மற்றும் சிலாபம் இடையே காலை மற்றும் மாலை வேளைகளில் அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.









