சட்டவிரோதமாக சொத்துக்களைச் சம்பாதித்த சம்பவம் தொடர்பில் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதீஷ் ரணதுங்க முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வழக்கின் முறைப்பாட்டுத் தரப்பு சாட்சிகள் சிலருக்கு அடுத்த தவணையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டதுடன், 89ஆவது சாட்சிக்கு அழைப்பாணை பிறப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முறைப்பாட்டுத் தரப்பின் 122ஆவது சாட்சியாகப் பெயரிடப்பட்ட கடற்படை கொமடோர் காமினி பிரியதர்ஷன, பிரதிவாதிக்கு கடற்படையால் வழங்கப்பட்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
பிரதிவாதி தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் எழுப்பிய குறுக்கு விசாரணைக் கேள்விகளுக்குப் பதிலளித்த சாட்சி, 2016 டிசம்பர் மாதத்தில் பிரதிவாதிக்கு அடிப்படைச் சம்பளமாக 16,500 ரூபா வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அதிலிருந்து 110 ரூபா கழிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
16,500 ரூபா என்பது மொத்தச் சம்பளம் எனக் குறிப்பிட்ட சாட்சி, கடற்படையால் வழங்கப்படும் ஏனைய கொடுப்பனவுகள் அதில் உள்ளடங்கவில்லை என்றும் தெரிவித்தார்.
வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி மீண்டும் நடைபெறவுள்ளது.









