2026ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டியில் புவேர்ட்டோ ரிக்கோ நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஜெனிபர் பாரெட்டோ பிரபஞ்ச அழகியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
75ஆவது ஆண்டாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதிச் சுற்று, நவம்பர் 24ஆம் திகதி புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவானில் கோலாகலமாக நடைபெற்றது.
உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 116 அழகிகள் போட்டியில் பங்கேற்ற நிலையில், இறுதிச் சுற்றில் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்திய 27 வயதான ஜெனிபர் பாரெட்டோ பிரபஞ்ச அழகிக்கான மகுடத்தைத் தனதாக்கிக் கொண்டார்.
இதன்மூலம் புவேர்ட்டோ ரிக்கோ நாட்டுக்காக ஆறாவது முறையாக பிரபஞ்ச அழகிப் பட்டம் வெல்லப்பட்டுள்ளது.
உளவியல் துறையில் பட்டப்படிப்பையும், மருத்துவ உளவியல் மற்றும் சமூகப் பணித்துறைகளில் முதுகலைக் கல்வியையும் பெற்றுள்ள ஜெனிபர் பாரெட்டோ, சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.
குறிப்பாக, ஒரு குழந்தைக்குத் தாயான இவர், பிரபஞ்ச அழகிப் போட்டியின் வரலாற்றில் இந்த மகுடத்தை வென்ற முதல் தாயாகவும் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
இறுதிப் போட்டியில் டொமினிக்கன் குடியரசின் மெலிசா நுனெஸ் இரண்டாம் இடத்தையும், வெனிசுலாவின் கிளாரா வேகாஸ் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
இந்த ஆண்டின் 75ஆவது ஆண்டு சிறப்புப் போட்டியில் 3,150 வைரங்கள் பதிக்கப்பட்ட 18 கரட் வெள்ளைத் தங்கத்தினால் உருவாக்கப்பட்ட புதிய மகுடம் அறிமுகப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
பெண்களின் திறமை, ஆளுமை, சமூகப் பங்களிப்பு மற்றும் சர்வதேச ரீதியிலான அவர்களின் அடையாளத்தைப் பறைசாற்றும் மேடையாக அமைந்த இப்போட்டியில் ஜெனிபர் பாரெட்டோ புதிய பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடியுள்ளார்.









