கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வீதி, இன்று காலை முதல் மீண்டும் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
பராமரிப்புப் பணிகள் மற்றும் ஆபத்தான நிலையில் காணப்பட்ட பாறைகளை அகற்றும் நடவடிக்கைகள் காரணமாக, குறித்த வீதி நேற்று (23) இரவு 11 மணி முதல் இன்று (24) அதிகாலை 6 மணி வரை முழுமையாக மூடப்பட்டிருந்தது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, கீழ் கடுகண்ணாவ பகுதியில் வீதியில் விழும் அபாயம் காணப்பட்ட பாறைகளைப் பாதுகாப்பாக அகற்றுவதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சுமார் ஏழு மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்தத் தற்காலிக வீதி மூடல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று காலை 6 மணி முதல் மீண்டும் வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் கொழும்பு மற்றும் கண்டி இடையே பயணிக்கும் சாரதிகள் வழமைபோன்று குறித்த வீதியைப் பயன்படுத்த முடியும்.
எனினும், மலைப்பாங்கான பகுதிகளில் பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறும், வீதிப் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.









