அமெரிக்காவுக்கான இலங்கையின் முதலாவது பெண் தூதுவராக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் செலவினத் தலைப்புகள் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின்போது அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இலங்கையின் முக்கியமான இராஜதந்திரப் பதவிகளில் ஒன்றான அமெரிக்காவுக்கான தூதுவர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
“தற்போது ஜேர்மனி மற்றும் அமெரிக்காவுக்கான தூதுவர் பதவிகளில் வெற்றிடங்கள் உள்ளன. முதன்முறையாக அமெரிக்காவுக்கான இலங்கையின் பெண் தூதுவராக வெளிவிவகார அமைச்சின் தற்போதைய செயலாளர் அருணி ரணராஜாவை நியமிக்கவுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்” என அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராகக் கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக தலைமை நெறிமுறை அதிகாரி ரோஹன அம்பகொல்ல எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி கனடாவுக்குப் புறப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், சீனாவுக்கான இலங்கைத் தூதுவராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள இராஜதந்திரி எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி நாடாளுமன்ற உயர் பதவிகள் தொடர்பான குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது நியமனத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
முக்கிய உலக நாடுகளுக்கான இலங்கையின் இராஜதந்திரப் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு தூதரக நியமனங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவுக்கான முதலாவது பெண் தூதுவர் நியமனம் விசேட கவனத்தைப் பெற்றுள்ளது.









